மகள் சாவில் மர்மம் இருப்பதாக புகார் : பிலிப்பைன்சில் இந்தியர் உண்ணாவிரதம்

டாக்டர்களின் அலட்சியமே, என் மகளின் சாவுக்கு காரணம்; எனவே, சிகிச்சை செலவை திரும்ப வழங்க வேண்டும்' எனக் கூறி, பிலிப்பைன்சில், இந்தியர் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.
இந்தியாவை சேர்ந்தவர், இவான் பெர்னாண்டஸ், 51. தற்போது, பிலிப்பைன்சில் வசித்து வருகிறார். இவரது, 4 வயது மகளுக்கு, கடந்த 2011, டிசம்பரில், திடீரென உடல் உறுப்புகள் செயல் இழந்ததால், மணிலாவில் உள்ள, சாங் ஹுவா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டாள். 2.2 கோடி ரூபாய் செலவழித்து, தீவிர சிகிச்சை அளித்தும், பலன் இன்றி இறந்தாள். தன் மகளின் சாவிற்கு, டாக்டர்களின் அலட்சியமே காரணம் எனக் கூறிய, இவான் பெர்னாண்டஸ், அந்நாட்டின், சுகாதாரத் துறைக்கு, புகார் ஒன்றை அனுப்பியிருந்தார். அதில், தீவிர சிகிச்சை பிரிவில் பணியாற்றும் நர்சுகள், பொறுப்பின்றி, தங்களை அழகுபடுத்திக் கொள்வதில் கவனம் செலுத்தியதாகவும், ஒரு கட்டத்தில், தன் மகள் படுத்திருந்த, படுக்கை, திடீரென உடைந்து போய்விட்டதாகவும் கூறியிருந்தார். இந்நிலையில், மகளை இழந்த, இவான், சிகிச்சைக்கான பணத்தை திரும்ப கேட்டு, காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை, நேற்று துவக்கியுள்ளார்.