இஸ்ரேல் ஏவுகணை சோதனை: சிரியா நாட்டு மக்கள் பீதி

இஸ்ரேல், அமெரிக்காவுடன் இணைந்து, ஏவுகணை சோதனை நடத்தியதால், சிரியாவில் நேற்று, போர் பீதி ஏற்பட்டது.

சிரியாவின் அதிபர், பஷர்-அல்-ஆசாத் பதவி விலகக் கோரி, கிளர்ச்சியாளர்கள், கடந்த இரண்டு ஆண்டுகளாக, ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின் றனர். இதனால் ராணுவத்தினருக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே, கடும் சண்டை நடந்து வருகிறது.கடந்த மாதம், 21ம் தேதி, ரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டதால், 1,300 பேர் பலியானதாக கூறப்படுகிறது. இந்நிலையில், கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக, ரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டதா என்பது குறித்து, ஐ.நா., நிபுணர் குழு, சம்பவ இடங்களில் ஆய்வு நடத்தியது. அத்துடன், சில மாதிரிகளையும் எடுத்துச் சென்று, அவற்றை பகுப்பாய்விற்காக அனுப்பியுள்ளனர்.ரசாயன ஆயுதங்களை பயன்படுத்திய சிரியா மீது, ராணுவ தாக்குதலை நடத்த, அமெரிக்க அதிபர் ஒபாமா திட்டமிட்டு உள்ளார். இதற்காக, அமெரிக்க பார்லிமென்ட்டின் ஒப்புதலை கோரியுள்ளார். அமெரிக்கா தாக்குதல் நடத்துவதற்கு, இஸ்ரேல், பிரான்ஸ், ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன.


சிரியாவுக்கு ஆதரவாக செயல்பட, ரஷ்யா திட்டமிட்டு உள்ளது. இதற்காக, உளவு கப்பல் ஒன்றை, மத்திய தரைகடல் பகுதிக்கு, ரஷ்யா அனுப்பி வைத்துள்ளது. ஜெர்மனும், பிரிட்டனும், இந்த தாக்குதலில் ஈடுபடப் போவதில்லை என, தெரிவித்துவிட்டன."சிரியா மீது தாக்குதல் நடத்த வேண்டாம்' என, அரபு நாடுகளும், சீனாவும் கேட்டு கொண்டுள்ளன. சண்டைக்கு முன்னோட்டமாக, அமெரிக்கா, போர் கப்பலை, மத்திய தரைகடல் பகுதிக்கு அனுப்பி வைத்துள்ளது. மத்திய தரைகடல் பகுதியில், இஸ்ரேல் நேற்று, கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனை நடத்தியது. இதை, ரேடார் மூலம் உணர்ந்த ரஷ்யா, சிரியா மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக, சில, "டிவி'க்களில் அறிவித்தது.

ஆனால், இதை மறுத்த இஸ்ரேல் ராணுவ அமைச்சகம், அமெரிக்காவுடன் இணைந்து, மத்திய தரைக்கடல் பகுதியில், ஏவுகணை சோதனை நடத்தியதாக, விளக்கம் அளித்தது.இஸ்ரேல் நடத்திய இந்த ஏவுகணை சோதனையால், சிரியாவில் போர் மூண்டு விட்டதாக, புரளி பரவியது. இதனால், ஆயிரக்கணக்கான மக்கள், தங்கள் இருப்பிடங்களை விட்டு, பாதுகாப்பான இடங்களுக்கு சென்றனர்.

உலக நாடுகளின் கவனத்தை ஈர்க்க முயற்சிக்கும் விடுதலை புலிகள்: கோத்தபயா

பல்வேறு நாடுகளில் உள்ள, விடுதலை புலிகளுக்கிடையே தொடர்பு இருப்பதால், மீண்டும் பயங்கரவாதம் தலைத்தூக்கும் அபாயம் உள்ளது,'' என, இலங்கை பாதுகாப்பு செயலர், கோத்தபயா ராஜபக்ஷே தெரிவித்துள்ளார்.

"போருக்கு பிந்தைய இலங்கையின் நிலை' குறித்த கருத்தரங்கு, கொழும்பு நகரில், நேற்று நடந்தது. இதில் பங்கேற்று, இலங்கை அதிபர் ராஜபக்ஷேவின் சகோதரரும், பாதுகாப்பு செயலருமான, கோத்தபயா பேசியதாவது:தமிழகத்தில் தமிழர்கள் அதிகம் உள்ளதால், இலங்கைக்கும், இந்தியாவுக்கும் இடையே உறவு பாதுகாக்கப்பட வேண்டியுள்ளது. மீனவர்கள் விஷயத்தில் அடிக்கடி கசப்புணர்வு ஏற்பட்டாலும், இருநாடுக்கிடையே உறவு பலமானதாக உள்ளது.இலங்கையின் வடக்கு மாகாண தேர்தலில், மறைமுகமாக, இந்தியாவின் அரசியல் ஆதிக்கம் உள்ளது. 


இலங்கையில், சீனாவின் ஆதிக்கம், அதிகம் உள்ளதாக கூறப்படுகிறது. சீனாவுடன், பொருளாதார மற்றும் தூதரக உறவில் நெருக்கமாக உள்ளோம். சீனாவுடன் கொண்டுள்ள உறவு, மற்ற எந்த நாடுகளையும் அச்சுறுத்துவதற்கல்ல.இலங்கையில், முஸ்லிம் பயங்கரவாதத்தை, தூண்டும் முயற்சிகள் நடக்கின்றன. சில வெளிநாட்டு சக்திகள், இலங்கை முஸ்லிம்களை, சர்வதேச முஸ்லிம்களாக காட்டும் நோக்கில், உள்ளூரில், ஒருமைப்பாட்டை குலைக்க முயற்சிக்கின்றன.இதே போல, உலகம் முழுவதும் உள்ள, விடுதலை புலிகளிடையே தொடர்பு உள்ளது. அவர்கள் மூலம் இலங்கையில் மீண்டும், பயங்கரவாதம் தலை தூக்கும் அபாயம் இருக்கிறது. இதன் மூலம், தனி ஈழத்தை உருவாக்கி, இலங்கையை துண்டாட அந்த அமைப்பு முயற்சிக்கலாம்.கடந்த வாரம், இலங்கைக்கு பயணம் மேற்கொண்ட, ஐ.நா.,மனித உரிமை ஆணையர் நவநீதம் பிள்ளை மூலம், விடுதலை புலிகள் சர்வதேச நாடுகளின் கவனத்தை ஈர்க்க முனைந்துள்ளனர்.இவ்வாறு கோத்தபயா பேசினார்

பிரிட்டனில் மிகப்பெரிய நூலகம் : பாக்., மாணவி மலாலா திறந்தார்

பிரிட்டனில் கட்டப்பட்டுள்ள மிகப்பெரிய நூலகத்தை, பாகிஸ்தான் மாணவி, மலாலா யூசுப், நேற்று திறந்து வைத்தார். ஆப்கானிஸ்தானை ஆட்சி செய்த தலிபான்கள், பெண்கள் பள்ளிக்கு செல்வதை எதிர்த்தனர். 

பாகிஸ்தானில், பெண் கல்விக்காக பிரசாரம் செய்த, மலாலா யூசுப்சாய், 16, என்ற மாணவியை, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம், தலிபான் பயங்கரவாதிகள் சுட்டனர். இதில், மலாலாவுக்கு தலை மற்றும் கழுத்தில் பலத்த காயம் ஏற்பட்டது. உயிருக்கு ஆபத்தான நிலையில், மலாலாவுக்கு, லண்டனில் உயர் சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது, உடல் நலம் தேறியுள்ள மலாலா, பிரிட்டனில் உள்ள, பர்மிங்காம் நகரில் படிக்கிறார். கடந்த, ஜூலை மாதம், ஐ.நா., சபையிலும், தன் பிறந்த நாளையொட்டி, மலாலா உரையாற்றினார். பர்மிங்காம் நகரில், 1,900 கோடி ரூபாய் செலவில், மிகப்பெரிய நூலகம் கட்டப்பட்டு உள்ளது. இந்த நூலகத்தை, மலாலா நேற்று திறந்து வைத்தார்

அமெரிக்க டாக்சியிலும் "சூடு' மீட்டர் : சீன மாணவரிடம் ரூ. 3 லட்சம் "கறந்த' டிரைவர்

சீன மாணவரை ஏமாற்றி, 3 லட்ச ரூபாயை, சவாரி கட்டணமாக வாங்கிய, டாக்சி டிரைவரை, அமெரிக்க போலீசார் தேடி வருகின்றனர். சீனாவை சேர்ந்த, 18 வயது மாணவர், அமெரிக்காவின், இல்னாய்ஸ் பல்கலை கழகத்தில் படிப்பதற்காக, கடந்த மாதம், 20ம்தேதி, சிகாகோ நகருக்கு வந்தார்.
விமான நிலையத்திற்கு வெளியே, வழி தெரியாமல் நின்று கொண்டிருந்த, சீன மாணவரை, டாக்சி டிரைவர் ஒருவர் அணுகியுள்ளார். "பஸ்சில் சென்றால் நீண்ட நேரம் ஆகும்; இங்கிருந்து இல்னாய்ஸ் பல்கலைகழகம், 241 கி.மீ.,தூரம் உள்ளது. 66 ஆயிரம் ரூபாய் கொடுத்தால், பல்கலைக்கு அழைத்து செல்கிறேன்' என, டாக்சி டிரைவர் தெரிவித்தார். வேறு வழியில்லாமல், அந்த டாக்சியில் பயணித்தார் சீன மாணவர். பல்கலை கழக வளாகத்தில் மாணவரை இறக்கி விட்ட, டிரைவர், 3 லட்ச ரூபாய் கேட்டுள்ளார். இதனால், அதிர்ச்சி அடைந்த மாணவர், "அவ்வளவு பணம் என்னிடம் இல்லை' என, கூறி, தன்னிடமிருந்த, 2.90 லட்ச ரூபாயை கொடுத்து விட்டு சென்றார். இந்த விஷயத்தை அறிந்த, பல்கலைகழக அதிகாரிகள், 20 ஆயிரம் ரூபாய் கட்டணம் பெற வேண்டிய டாக்சி டிரைவர், மாணவரை ஏமாற்றியது குறித்து போலீசில் புகார் செய்துள்ளனர். டிரைவரை, போலீசார் தேடி வருகின்றனர். இது குறித்து பல்கலை கழக அதிகாரி, குறிப்பிடுகையில், "இந்த மாணவர் ஏன், கையில் இவ்வளவு பணத்தை வைத்திருந்தார். போலீசிடம் புகார் தெரிவிக்காமல் எதற்காக, டிரைவர் கேட்ட பணத்தை அப்படியே கொடுத்தார் என்பது தெரியவில்லை.மொபைல் போனையும் டாக்சியில் தவறவிட்டுள்ளார்' என்றார்

நோக்கியா மொபைல் பிரிவை மைக்ரோசாப்ட் வாங்குகிறது

மைக்ரோசாப்ட் நிறுவனம், நோக்கியோ கார்ப்பரேஷன் நிறுவனத்தின் மொபைல்போன் தயாரிப்பு வர்த்தகத்தை, 717 கோடி டாலருக்கு (45 ஆயிரம் கோடி ரூபாய்) கையகப்படுத்துகிறது.
இதையடுத்து, நோக்கியோ நிறுவனத்தின் மொபைல்போன் பிரிவை சேர்ந்த, 32 ஆயிரம் பணியாளர்கள், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் கீழ் மாற்றப்பட உள்ளனர். இதில், பின்லாந்தில் உள்ள நோக்கியோ மொபைல்போன் தொழிற்சாலையை சேர்ந்த, 18,300 தொழிலாளர்களும், 4,700 அலுவலர்களும் அடங்குவர்.
நோக்கியோ கார்ப்பரேஷன் நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரி பதவியில் இருந்தும், நிர்வாக இயக்குனர்கள் குழுவில் இருந்தும் ஸ்டீபன் எலோப் ராஜினாமா செய்கிறார். இருந்தபோதிலும், அவர் நிறுவனத்தின், சாதனங்கள் மற்றும் சேவைகள் பிரிவின் செயல் துணை தலைவராக பொறுப்பேற்பார் என, தெரிகிறது.

மகள் சாவில் மர்மம் இருப்பதாக புகார் : பிலிப்பைன்சில் இந்தியர் உண்ணாவிரதம்

டாக்டர்களின் அலட்சியமே, என் மகளின் சாவுக்கு காரணம்; எனவே, சிகிச்சை செலவை திரும்ப வழங்க வேண்டும்' எனக் கூறி, பிலிப்பைன்சில், இந்தியர் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.
இந்தியாவை சேர்ந்தவர், இவான் பெர்னாண்டஸ், 51. தற்போது, பிலிப்பைன்சில் வசித்து வருகிறார். இவரது, 4 வயது மகளுக்கு, கடந்த 2011, டிசம்பரில், திடீரென உடல் உறுப்புகள் செயல் இழந்ததால், மணிலாவில் உள்ள, சாங் ஹுவா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டாள். 2.2 கோடி ரூபாய் செலவழித்து, தீவிர சிகிச்சை அளித்தும், பலன் இன்றி இறந்தாள். தன் மகளின் சாவிற்கு, டாக்டர்களின் அலட்சியமே காரணம் எனக் கூறிய, இவான் பெர்னாண்டஸ், அந்நாட்டின், சுகாதாரத் துறைக்கு, புகார் ஒன்றை அனுப்பியிருந்தார். அதில், தீவிர சிகிச்சை பிரிவில் பணியாற்றும் நர்சுகள், பொறுப்பின்றி, தங்களை அழகுபடுத்திக் கொள்வதில் கவனம் செலுத்தியதாகவும், ஒரு கட்டத்தில், தன் மகள் படுத்திருந்த, படுக்கை, திடீரென உடைந்து போய்விட்டதாகவும் கூறியிருந்தார். இந்நிலையில், மகளை இழந்த, இவான், சிகிச்சைக்கான பணத்தை திரும்ப கேட்டு, காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை, நேற்று துவக்கியுள்ளார்.

கனடாவில் நிலநடுக்கம்

கனடா நாட்டில் இன்று அதிகாலையில்நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு ‌கோலில் 6.2 அளவாக பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல்வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர் இருப்பினும் சேத மதிப்பு குறித்து தகவல் எதுவும் வெளியிடப்பட வில்லை